Sunday, November 8, 2015

#SaveThamirabarani #தாமிரபரணியைகாப்போம்

கொள்ளை போகும் தாமிரபரணி தண்ணீர்... குளிர்பான கம்பெனிக்கு எதிராகக் கொதிக்கும் மக்கள்! 

#SaveThamirabarani #தாமிரபரணியைகாப்போம்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பெப்சி குளிர்பான நிறுவனத்துக்கு ஆலை அமைக்க அனுமதி அளித்திருக்கிறது, தமிழக அரசு. அதைத்தொடர்ந்து அந்த ஆலை முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பெப்சி குளிர்பான நிறுவனம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சேகரித்துள்ள சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் 2005-ம் ஆண்டில் இருந்து 'கோகோ கோலா' குளிர்பான கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதி பெற்று, படிப்படியாக தண்ணீரின் அளவையும், அனுமதியையும் நீட்டித்து தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அதே சிப்காட் வளாகத்தில் அமெரிக்க நிறுவனமான பெப்சி கம்பெனிக்கு 36 ஏக்கர் ஒதுக்கப்பட்டு ஆலைகட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதினைந்தே நாட்களில் இதற்கு அரசு அனுமதி வழங்கி கட்டுமான வேலைகளும் நடந்து வருகின்றன.

இந்த 36 ஏக்கருக்கு அரசின் வழிகாட்டி மதிப்பு 5 கோடியே 40 லட்சம் ரூபாய். இதன் சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் இந்த கம்பெனியைத் துவங்க பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.  இந்த 36 ஏக்கர் நிலத்துக்கு, பெப்சி நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் வீதம், 98 ஆண்டு ஆண்டுகள் வரை செலுத்த வேண்டுமென்றும், 99-ம் ஆண்டு முதல் ஏக்கர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் செலுத்த வேண்டுமென்றும் அரசு, அந்த கம்பெனியுடன் 'மாபெரும் ஒப்பந்தம்' போட்டுள்ளது. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள நிலத்துக்கு 100 ஆண்டுகளுக்கு பெப்சி நிறுவனம் செலுத்தவிருக்கும் தொகை வெறும் 3,672 ரூபாய்தான். அதோடு, இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி நதியிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி கேட்டுள்ளது, பெப்சி நிறுவனம்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் மட்டும்தான் குடிநீரே தற்போது கிடைத்து வருகிறது. இந்த நிறுவனம் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். வரையறையே இல்லாத தாமிரபரணி நீர்க்கொள்ளையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். ஏற்கெனவே கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகளால் இப்பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளும் கடுமையாக மாசுபட்டுள்ளன" என்றார், முகிலன்.

இந்த விவகாரம் குறித்து சிப்காட் மேலாண்மை இயக்குனர் டாக்டர்.செல்வராஜிடம் பேசிய போது, "விவசாயிகளின் எதிர்ப்பு அரசின் கவனத்துக்கு தற்போதுதான் வந்துள்ளது. பெப்சி கம்பெனிக்கு தண்ணீர் எடுப்பதால் குடிநீருக்கும், பாசனத்துக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுமா என்பதை ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் பேசினோம். "சிப்காட் பெப்சி கம்பெனி விவகாரம் என்னோட டிபார்ட்மெண்ட் இல்லை" என நழுவிக் கொண்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு கேரள மாநிலம் பிளாச்சிவாடா பகுதியில் இயங்கிவந்த கோகோ கோலா கம்பெனியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய,  கேரள அரசு ஒரு குழுவை நியமித்தது. பாதிப்புகளை முழுவதும் ஆய்வு செய்த அக்குழு, 'விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், கோகோ கோலா நிறுவனம், கேரள அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' எனப் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், 'என் துறையின் கீழ் வராது' என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

விவசாயத்துக்கும், மக்கள் குடிப்பதற்கும் தடையற தண்ணீர் வழங்க எந்த திட்டமும் போடாத அரசுகள், கோடிக்கணக்கில் கையூட்டுக்களைப் பெற்றுக் கொண்டு குறைந்த வாடகைக்கு நிலத்தைக் கொடுத்து, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கேள்வி. அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

மக்கள் போராடினால் வெற்றி நிச்சயம்!

"தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்று திருச்சி மாவட்டம், சூரியூரில் இயங்கி வந்த பெப்சி நிறுவனம் மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் 71.35 ஏக்கர் பரப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனியின் அனுமதியும் கடந்த ஏப்ரல், 21-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மக்களின் தொடர் போராட்டம் தாங்க முடியாமல், சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனியை, தாங்களாகவே மூடிக் கொண்டு விட்டனர். அதனால், விவசாயிகள், மக்களின் கூட்டு முயற்சி, போராட்டத்தால் கங்கை கொண்டானில் அமைய இருக்கும் பெப்சி கம்பெனியையும் நிச்சயம் தடுத்து விடலாம். அனைத்து சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள், அனைத்துக்கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விரைவில் பெரிய அளவில் கூட்டுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார், முகிலன்.

"கம்பெனிகளின் கைக்கூலியா காவல்துறை?"

போராட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர்  27-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிப்காட் வளாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போலீசார் தடியடி நடத்தியதில், அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ காவேரி உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். 3 பேரின் மண்டை உடைந்துள்ளது.

இப்போராட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் மற்றும் தென் மண்டலப் பொறுப்பாளர் தமிழ்நேசனிடம் பேசினோம். "சிப்காட் அருகே உள்ள நால்வழிச்சாலையில் எங்கள் கட்சித்தலைவர் வேல்முருகன் தலைமையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 ஆண், பெண் விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக வந்தோம். சிப்காட் வளாக வாசலை நெருங்கும் போது காவல் துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ காவேரி, 'பேரணியாப் போய் முற்றுகையிடத்தானே போறோம். ஏன் அனுமதி தர மாட்டேங்கிறீங்க... எங்களால எந்தப்  பிரச்னையும் வராது'னு காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னார். அப்போதும் அவர்கள்  அனுமதிக்கவில்லை. உடனே, 'பெப்சி கம்பெனிக்கு ஆதரவாகச் செயல்படுறீங்களா?'னு திரும்பவும் காவேரி கேட்டதும், அவரை தடியால் அடித்தனர்.

உடனே, சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போதும் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்காமல் இரக்கமில்லாமல், தடி கொண்டு அடித்தனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ காவேரி உட்பட 3 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. 10 பேர் படுகாயமடைந்தனர். அமைதியாக நடக்க வேண்டிய போராட்டம் காவல்துறையினரால் இப்படி மாறிவிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பெப்சி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்யாவிட்டால், நாங்களே பொக்லைன் கொண்டு கட்டடத்தை இடிப்போம்" என்றார்.

Save thamiraparani.

Saturday, November 7, 2015

#savethamiraparani.

தாமிரபரணி ஆறும் - எதிர்கால கவலைகளும்

தாமிரபரணி ஆறும் - எதிர்கால கவலைகளும்!

“ஏலே’ “என்னலே’ என கொஞ்சும் தமிழில் பேசி நெஞ்சம் அள்ளும் ஊர்தான் திருநெல்வேலி சீமை! மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் முழு அழகை இம்மாவட்டத்தில் காண முடியும்.

திருநெல்வேலி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது “இருட்டுக் கடை’ அல்வாதான்! மாலை 5 மணி ஆனதும், ஒற்றை விளக்கில் - பழமை மாறாமல் இருக்கும் அந்தக் கடையில்; வாழை இலையில் சுடச்சுட, நெய் ஒழுக தரும் அந்த அல்வாவை சாப்பிடும் ருசியே தனிதான்! நாக்கில் பட்டதும், தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கிச் செல்லும் வாகனங்களைப் போல அந்த அல்வா வயிற்றுக்குள் போய்விடும்!

அதேபோல் குற்றால அருவி, களக்காடு அருவி, பாபநாசம் அருவி போன்றவைகளும், பல அணைக்கட்டுகளும், அதைச் சார்ந்த வனப்பகுதிகளும், மாஞ்சோலை எஸ்டேட்டும் சுற்றுலாவாசிகளை கொள்ளை கொள்ளும்!

இதில், சுற்றுலாவாசிகள் பலரும் அறியாத ஒன்று தாமிரபரணி நதியின் சிறப்பாகும்.

தமிழ்நாட்டில் ஒரேயொரு வற்றாத ஜீவநதி தாமிரபரணி மட்டுமே! தமிழகத்தில் பாயும் பிற நதிகள் யாவும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உற்பத்தியாகின்றன. ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழகத்தை மட்டுமே வளப்படுத்துவதுடன், ஆண்டு முழுதும் நீரோட்டத்தைப் பெற்றிருப்பதால் தாமிரபரணி தனிச் சிறப்பு பெறுகிறது.

தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் மன்னார் வளைகுடா வரையில் தாமிரபருணி ஆற்றின் நீளம் 125 கி.மீ.! திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400 வாக்கிலேயே இந்தப் பகுதியில் நாகரீகமான மக்கள் வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில் மேற்கொண்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. வரலாற்றாய்வாளர்களின் கருத்தில், இந்திய ஆறுகளில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது தாமிரபருணி. 

இந்த ஆறு, காவிரியைப் போலவே, இரு பருவ மழைக் காலங்களிலும் தண்ணீரைப் பெறுகிறது. குறுகிய, ஆனால், அதுவே உருவாக்கிய வளமான வண்டல் மிக்க படுகை வழியே தாமிரவருணி செல்கிறது. இதுபோன்ற ஆறுதான், வேளாண் சாகுபடிக்கு, குறிப்பாக, பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு மிகவும் பொருத்தமானது. 

தாமிரவருணி, பாண்டிய நாட்டில் இருந்தது. ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில்தான் கொற்கைத் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகம், “தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ’ மற்றும் தாலமியின் “ஜியாகிராபி’ ஆகிய இரு நூல்களிலுமே காணக் கிடைக்கிறது.

‘தாம்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘செம்பு’ என்ற அர்த்தம் உண்டு. ‘பர்ண’ என்ற சொல்லுக்கு நிறம் என்ற அர்த்தமும் உண்டு. இத்தண்ணீரில் செம்பு தாது அதிகம் இருப்பதாலும் தாமிரபரணி என பெயர் விளங்குவதாகக் கூறப்படுகிறது. சங்க இலக்கியங்கள் இதை ‘பொருநை’ நதி என குறிப்பிடுகின்றன.

நெல்லை பாபநாசத்தில் மலை உச்சியில் உருவாகி இயற்கையாகவே தேங்கி; அருவியாய் கொட்டுகிறது. இதில் குளித்துவிட்டு அங்குள்ள சித்த மருத்துவர்கள் தரும் வாழைப்பழம் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் தீருமாம்!

பிறகு மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு போன்ற சிறு ஆறுகள் இணைந்ததும் தாமிரபரணி பெரிய ஆறாக ஓட்டம் பெறுகிறது.

நான் திருநெல்வேலி-மேலப்பாளையம் செல்லும் போதெல்லாம் தாமிரபரணியில் ஒரு குளியல் போட்டுவிடுவேன்.

கடந்த ஆகஸ்ட் 25 அன்று தலைமையகத்தில் பிளாக் அன்ட் ஒயிட் தொலைக்காட்சி பிரிவில் பணியாற்றும் தம்பி தாஹா இல்ல திருமண நிகழ்வுக்காகச் சென்றிருந்தோம். 

அன்று காலை நெல்லை ரயில் நிலையத்தில் இறங்கியதுமே ஆற்றுக்குப் போகவேண்டும் என மாவட்ட, நகர நிர்வாகிகளிடம் கூறிவிட்டேன். அங்கே மண்டலம் ஜெய்னுலாபிதீன், கோவை செய்யது ஆகியோரும் காத்திருந்தனர்.

மேலப்பாளையத்தில் இருந்து 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரமிருக்கும். முனீர்பள்ளம் நோக்கி மாசுபடாத அந்தப் பகுதிக்குச் சென்றோம்! இதே பகுதியில் மருதநாயகம் எதிரிகளுடன் போர் செய்த வரலாற்று குறிப்பும் உள்ளது.
செடிகள், புதர்கள் அணிவகுக்க உற்சாகமாய் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணியில் இறங்கி; மூழ்கி; சோம்பல் தொலைத்து உற்சாகமானோம்.

ஏராளமானோர் நதியின் பல்வேறு கரைகளில் கூட்டம், கூட்டமாக குளித்துக் கொண்டிருந்தனர்! நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூரின் தெற்குப் பகுதிகளில்; காவிரியின் கிளை ஆறுகளில் குளிக்கும் அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! ஆனால் முற்றிலும் மாறுபட்டது தாமிரபரணி அனுபவமாகும்! இங்கு பாறைகள் அதிகம். சுழற்சியும், நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். கவனமாக குளிக்காவிடில் ஆற்றில் இழுத்துச் செல்ல நேரிடும்! 2004ல் எனக்கு அப்படி ஒரு அனுபவம் தாமிரபரணியில் நிகழ்ந்தது! நல்லவேளை தப்பித்து விட்டேன்!

அன்று நாங்கள் கவலை மறந்து குளித்தோம்! அயிரை மீன்கள் எங்களைக் கடிக்க, கடிக்க நாங்கள் துள்ளிக் குதித்தோம். அவ்வளவு குதூகலமாக இருந்தது!

ஒருபக்கம் கொக்குகள், பறவைகள் வீற்றிருந்தன. நீரோட்டம் வேகமாக இருந்தது. செடி, கொடிகள் படகுகளைப் போல மிதந்து சென்றன! அது நதிக்கு அழகு சேர்த்தது.

கிணற்றில் குளிப்பது, குளத்தில் குளிப்பது, ஏரியில் குளிப்பது போன்ற அனுபங்கள் இன்றைய தலைமுறையிடம் இல்லாமல் போய்விட்டது!

2 வாளி தண்ணீரில் அவசர அவசரமாக “கடமை’க்கு குளித்துவிட்டு, பரபரப்புகளை நோக்கி ஓடிவிடுகிறார்கள்.
இறைவன் தந்த இயற்கையின் அருட்கொடைகளை அனுபவிக்க மறுக்கிறோம்.

நாங்கள் குளித்துவிட்டு கரையேறிய போது நதிப்படுகையில் நெல்வயல்கள் பசுமையாய் சிரித்துக் கொண்டிருந்தது. வற்றாத தாமிரபரணியில் ஆண்டுதோறும் விவசாயம் நடக்கிறது! ஆனால் நன்றியுணர்வு தான் மனிதர்களுக்கு இல்லை.

இன்றும் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்கிறது. நல்லக்கண்ணு ஐயா போன்றவர்களின் போராட்டத்தால் ஓரளவு அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ‘தாமிரபரணி’ ஆறு குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நதி நாளையும் இருக்குமா? நாங்கள் அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சி அடுத்த 30 வருடங்களுக்குப் பிறகும் கிடைக்குமா? என மனம் ஏங்குகிறது.
ஏன்? சுற்றுச்சூழல் குறித்த அக்கறை சிறிதும் இன்றி மணல் கொள்ளை நடக்கிறது. நதியில் ஒரு பெரிய தினசரி பத்திரிக்கையின் காகித ஆலைக் கழிவுகள் கலக்கின்றன.

நெல்லை நகருக்குள் நுழையும்போது சாக்கடைப் போல் மாறுகிறது அழகான தாமிரபரணி! பூக்களையும், செடிகளையும், மூலிகைகளையும் உள்வாங்கி, மனிதர்களைத் தூய்மைப்படுத்த வந்த நதி, மனிதர்களால் அழுக்காகி; பிளாஸ்டிக் கழிவுகளை முதுகில் சுமந்தபடியே; சோகத்தோடு கடல் நோக்கி இறுதி யாத்திரை நடத்துகிறது!

எல்லா நிலைகளிலும் மனிதர்களுக்கு வாழ்வு தரும் நதியின் வாழ்வுரிமையை நாம் அழிக்கலாமா?

தோழர்களே... ஆறு, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கத் துணிவோம்! நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை எதிர்ப்போம்!

மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தால், அது தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்கும் என்ற எச்சரிக்கையை அனைவருக்கும் எடுத்துரைப்போம்!

- தமிமுன் அன்சாரி

தண்ணீர்..தண்ணீர்...

தண்ணீர்..தண்ணீர்... 

ஒரு குழாயில், ஒரு நொடிக்கு, ஒரு சொட்டு தண்ணீர் வீதம் வீணாகச் சென்று கொண்டிருந்தால்... ஓர் ஆண்டில் எத்தனை லிட்டர் வீணாகும் தெரியுமா?
'ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகும்' என்கிறது, ஒரு புள்ளி விவரம்!
ஒரு குழாயில் மட்டுமே இப்படியென்றால், பற்பல காரணங்களால் எத்தனை கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கே இப்படி தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்க... பக்கத்து ஊரில், பக்கத்து மாவட்டத்தில், பக்கத்து மாநிலத்தில், பக்கத்து நாட்டில் என்று எங்கெங்கும் வறண்ட தொண்டைகளும், உலர்ந்த நாக்குகளும், வெடித்துக் கிடக்கும் நிலங்களும் வேதனையுடன் காத்துக்கிடக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டால், தண்ணீர் விரயத்தைத் தவிர்த்து விடுவோம்.
'தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் விழும் மழை நீரை சேமிப்பதற்காகத்தான், அதனருகிலேயே சிவகங்கை குளத்தை வெட்டினார், ராஜராஜ சோழன். பிற்காலத்தில், செவ்வப்ப நாயக்கர் என்பவர், சுடுமண் குழாய்கள் மூலமாக, பெரியகோயில் மழை நீரை சிவகங்கை குளத்தில் சேர்த்தார்’ என்கிறது, வரலாறு. 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர், முன்னோர். கோயில் என்றால் குளமும் சேர்ந்ததுதான். கோயில் கட்ட மண் எடுக்கும் குழியை, நீரைச் சேமிக்கும் குளமாக மாற்றியுள்ளார்கள்.
'ஏரிகள் மாவட்டம்’ என்று சொல்லும் அளவுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏரிகளை பல்லவர்கள் வெட்டினார்கள். ஒரு ஏரி நிரம்பினால், அடுத்த ஏரிக்கு நீர் வழிந்தோடி செல்லும் வகையில் அற்புதமான நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் பல்லவ மன்னர்கள்.

இப்படி குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் என்று நீராதாரங்களைப் பெருக்கினர் அன்றைய மன்னர்கள். ஆனால், 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று சொல்லிக் கொண்டு இன்றைக்கு ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவோர்... இருக்கின்ற நீராதாரங்களையெல்லாம் பட்டா போட்டுக் கொள்வதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள்!
குளத்தைக் காணோம்!
2008ம் ஆண்டு தமிழக அரசின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், மழை நீரை ஆதாரமாகக் கொண்ட 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3 ஆயிரத்து 936 நடுத்தர குளங்களும்; பொதுப்பணித்துறையின் கீழ், 5 ஆயிரத்து 276 மழை நீரால் நிரம்பும் குளங்களும்,
3 ஆயிரத்து 627 நதி நீரால் நிரம்பும் குளங்களும், 9 ஆயிரத்து 886 தனியார் குளங்களும் இருந்துள்ளன. ஆனால், ஆறு ஆண்டுகளில் இவற்றில், 40 சதவிகித குளங்கள் காணாமல் போய்விட்டன.
ஓடைகள் ஆக்கிரமிக்கப்படிருப்பதால், குளங்கள் அழிகின்றன. குளங்கள் ஆக்கிர மிக்கப்படுவதால், வயல்கள் அழிகின்றன. அதனால், வயல்கள் வீட்டுமனைகளாக மாறி, விவசாயம் அழிகிறது. மதுரையில்
39 சதவிகித குளங்களும், சென்னையில் 60 சதவிகித குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
2007-08ம் ஆண்டில் ஏரி, குளங்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்த அரசு, அடுத்த ஆண்டே (2009) 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. 'நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்' என உத்தரவு போடும் நீதிமன்றங்களே, ஏரி, குளம்... போன்ற நீராதாரங்களின் மேல் அமைக்கப்படுகின்றன. இந்த முரண்பாடுகளால் முற்றிலுமாக சிதைந்து கிடக்கின்றன, நீர்த் தாங்கிகள். கோடிக்கால் பூதங்களாக பூமியைப் பிளந்து நிற்கின்றன, சிறிதும் பெரிதுமான ஆழ்துளை கிணறுகள்.
போனது போகட்டும்... இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டாமா? அதற்கு நீர் சிக்கனத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
விவசாயிகள்தான் முதலில் சேமிக்க வேண்டும்!
இதைப் பற்றி பேசிய திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோராஜ், ''அதிகரித்துவிட்ட மக்கள்தொகையால், நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருக்கும்போது இஷ்டத்துக்கு செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டு, சிக்கனமாகச் செலவு செய்தாலே பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினமும் சேமிக்க முடியும். பிரிட்டன் போன்ற நாடுகளில் கார்களை தண்ணீரில் கழுவ தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு வரையறை இல்லாததால், வாரி இறைக்கிறோம். குறிப்பாக, விவசாயிகள், நீர்ச் சிக்கனத்தை உடனடியாக கைக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக நீர் தேவைப்படுவதும் அவர்களுக்குத்தான். நீரின் தேவையை நன்கு அறிந்தவர்களும் அவர்கள்தான். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் என பாசன முறைகளில் வளர்ந்து கிடக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாரிடமெல்லாம் அதிக தண்ணீர் வசதி இருக்கிறதோ... அவர்கள்தான் இதை உடனடியாகச் செய்ய வேண்டும். இவ்வளவு கடுமையான வறட்சி காலத்திலும் இன்னும் பல இடங்களில் வாய்க்கால் பாசனத்தையே மேற்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
பயிர் அறிந்து பாசனம் செய்!
வறட்சியான காலங்களில் அதிக நீர் தேவையுள்ள பயிர்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மண்ணுக்கு ஏற்ற பாசன முறைகளைக் கைகொள்ள வேண்டும். உதாரணமாக, செம்மண், மணல் கலந்த களிமண் நிலமுள்ள விவசாயிகள், குறைந்த இடைவெளியிலும் (7 நாட்களுக்கு ஒரு முறை), களிமண் பகுதி விவசாயிகள், நீண்ட இடைவெளியில் (15 நாட்களுக்கு ஒரு முறை) பாசனம் செய்ய வேண்டும். பொதுவாக, நாம் பாசனம் செய்யும் நீரில் 10% மட்டுமே நிலத்துக்குள் செல்கிறது. 90% ஆவியாகி விடுகிறது. நிறைய நீர் விட்டால்தான் பயிர் நன்றாக வளரும் என நினைப்பது தவறு. பயிரின் வயதுக்கேற்ற அளவுக்கு தண்ணீர் கொடுத்தாலே போதுமானது. நிலம் குளிர பாசனம் செய்வதால் எந்தப் பலனும் இல்லை. பயிர்களின் சல்லிவேருக்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்தால் போதுமானது. 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்றார்கள், பெரியவர்கள். அது விவசாயத்துக்கும் பொருந்தும். 'பயிர் அறிந்து பாசனம் செய்’ என்பதை விவசாயிகள் புரிந்து கொண்டால்... நிலத்தில் நீரை உறிஞ்சுவது குறையும். ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதும் குறையும்.
நிலத்தடி நீர் இத்தனை அதலபாதாளத்துக்கு போயிருப்பதற்கு முக்கியக் காரணம், ஆழ்துளைக் கிணறுகள்தான். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு அதிகபட்சம் 50 ஆழ்துளைக் கிணறுகள் வரை இருக்கலாம். ஆனால், இன்றைக்கு 175 முதல் 200 ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதால், பூமிக்கு அடியில் உள்ள கரும்பாறைகள் உடைக்கப்பட்டு ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால், பாறைகள் நகர்ந்து நிலநடுக்கம், பூகம்பம் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குளங்களைப் பராமரித்தால்தான்... ஆழ்துளைக் கிணறுகள் வாழும்!
ஒவ்வொரு மாவட்டத்திலும், பூமிக்கு கீழ் உள்ள பாறைகளில் குறிப்பிட்ட அடி தூரத் தில், பாறைப் பிளவுகள் இருக்கும். உதாரண மாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 41, 84, 126, 187, 234, 315, 421, 480, 520, 570 ஆகிய அடி தூரத்தில், பிளவுகள் இருக்கும். இந்தப் பாறைப் பிளவுகளுக்கு தண்ணீர் கொடுப்பவை, திறந்தவெளி நீர்த்தாங்கிகளான குளங்கள்தான். அவற்றில் தண்ணீர் இல்லாதபோது, இந்த பிளவுகளிலும் தண்ணீர் இருக்காது. அதனால் தான், 700 அடி போனாலும் தண்ணீர் வருவதில்லை. தற்போது, ஆயிரம் அடிகள் வரை சாதாரணமாக போர் போடு கிறார்கள். இது தவறு.
மத்திய, மாநில நீர்வளத்துறைகள் பரிந் துரைக்கும் அளவு, பெரும்பாலான மாவட்டங் களில் 650 அடிதான். 'இந்த அளவுக்கு போர் போட்டாலும் தண்ணி கிடைக்கறதில்லையே அதுக்கு என்ன செய்ய..?’ என்ற கேள்வி உங்களுக்கு எழும். குளங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தால், 650 அடிக் குள்ளேயே நிச்சயம் தண்ணீர் கிடைக்கும், என்பதுதான் உண்மை.
பொதுவாக, கோடைக்காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும்போது, பூமிக்கு அடியில் உள்ள சில வறண்டு போன ஓடைகளில் தண்ணீர் கிடைக்காது. அதையும் தாண்டி கீழே கிடைக்கும் தண்ணீர், மண்ணுடன் கலந்து சிமெண்ட் போல உருவாகி, இந்த வறண்ட ஓடைகளை அடைத்து விடும். இதைத் தவிர்க்க, தண்ணீரை உள்ளே செலுத்தி, அழுத்தம் (ஃபிளஸ்ஷிங்) கொடுத்து கழுவி, மீண்டும் தண்ணீரை வெளியே எடுக்க வேண்டும். அவசரம் கருதி பல இடங்களில் இப்படிச் செய்வதில்லை. ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள், இதை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாய நிலங்கள், வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளுக்கு அருகே மழை நீர்ச் சேமிப்பை ஏற்படுத்தினால் தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும்'' என்றவர்,
''தண்ணீர் நமக்கு மட்டும் சொந்தமானதில்லை. அனைவருக்குமான பொதுச்சொத்து என்பதை மனதில் நிறுத்தினால், வருங்காலம் வளமானதாக மாற வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
- பொங்கிப் பாயும்...

இந்த தேசத்தின் தாகம் ``கோக்``கால் அடங்காது!

இந்த தேசத்தின் தாகம் ``கோக்``கால் அடங்காது என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் ..தவித்துச் சாவோம்...! நமக்கு முன்னால் தாமிரபரணி சாகும்...!