Saturday, November 7, 2015

தாமிரபரணி ஆறும் - எதிர்கால கவலைகளும்

தாமிரபரணி ஆறும் - எதிர்கால கவலைகளும்!

“ஏலே’ “என்னலே’ என கொஞ்சும் தமிழில் பேசி நெஞ்சம் அள்ளும் ஊர்தான் திருநெல்வேலி சீமை! மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் முழு அழகை இம்மாவட்டத்தில் காண முடியும்.

திருநெல்வேலி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது “இருட்டுக் கடை’ அல்வாதான்! மாலை 5 மணி ஆனதும், ஒற்றை விளக்கில் - பழமை மாறாமல் இருக்கும் அந்தக் கடையில்; வாழை இலையில் சுடச்சுட, நெய் ஒழுக தரும் அந்த அல்வாவை சாப்பிடும் ருசியே தனிதான்! நாக்கில் பட்டதும், தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கிச் செல்லும் வாகனங்களைப் போல அந்த அல்வா வயிற்றுக்குள் போய்விடும்!

அதேபோல் குற்றால அருவி, களக்காடு அருவி, பாபநாசம் அருவி போன்றவைகளும், பல அணைக்கட்டுகளும், அதைச் சார்ந்த வனப்பகுதிகளும், மாஞ்சோலை எஸ்டேட்டும் சுற்றுலாவாசிகளை கொள்ளை கொள்ளும்!

இதில், சுற்றுலாவாசிகள் பலரும் அறியாத ஒன்று தாமிரபரணி நதியின் சிறப்பாகும்.

தமிழ்நாட்டில் ஒரேயொரு வற்றாத ஜீவநதி தாமிரபரணி மட்டுமே! தமிழகத்தில் பாயும் பிற நதிகள் யாவும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உற்பத்தியாகின்றன. ஆனால் தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழகத்தை மட்டுமே வளப்படுத்துவதுடன், ஆண்டு முழுதும் நீரோட்டத்தைப் பெற்றிருப்பதால் தாமிரபரணி தனிச் சிறப்பு பெறுகிறது.

தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் மன்னார் வளைகுடா வரையில் தாமிரபருணி ஆற்றின் நீளம் 125 கி.மீ.! திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400 வாக்கிலேயே இந்தப் பகுதியில் நாகரீகமான மக்கள் வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில் மேற்கொண்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. வரலாற்றாய்வாளர்களின் கருத்தில், இந்திய ஆறுகளில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது தாமிரபருணி. 

இந்த ஆறு, காவிரியைப் போலவே, இரு பருவ மழைக் காலங்களிலும் தண்ணீரைப் பெறுகிறது. குறுகிய, ஆனால், அதுவே உருவாக்கிய வளமான வண்டல் மிக்க படுகை வழியே தாமிரவருணி செல்கிறது. இதுபோன்ற ஆறுதான், வேளாண் சாகுபடிக்கு, குறிப்பாக, பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு மிகவும் பொருத்தமானது. 

தாமிரவருணி, பாண்டிய நாட்டில் இருந்தது. ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில்தான் கொற்கைத் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகம், “தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ’ மற்றும் தாலமியின் “ஜியாகிராபி’ ஆகிய இரு நூல்களிலுமே காணக் கிடைக்கிறது.

‘தாம்ர’ என்ற வடமொழி சொல்லுக்கு ‘செம்பு’ என்ற அர்த்தம் உண்டு. ‘பர்ண’ என்ற சொல்லுக்கு நிறம் என்ற அர்த்தமும் உண்டு. இத்தண்ணீரில் செம்பு தாது அதிகம் இருப்பதாலும் தாமிரபரணி என பெயர் விளங்குவதாகக் கூறப்படுகிறது. சங்க இலக்கியங்கள் இதை ‘பொருநை’ நதி என குறிப்பிடுகின்றன.

நெல்லை பாபநாசத்தில் மலை உச்சியில் உருவாகி இயற்கையாகவே தேங்கி; அருவியாய் கொட்டுகிறது. இதில் குளித்துவிட்டு அங்குள்ள சித்த மருத்துவர்கள் தரும் வாழைப்பழம் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் தீருமாம்!

பிறகு மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு போன்ற சிறு ஆறுகள் இணைந்ததும் தாமிரபரணி பெரிய ஆறாக ஓட்டம் பெறுகிறது.

நான் திருநெல்வேலி-மேலப்பாளையம் செல்லும் போதெல்லாம் தாமிரபரணியில் ஒரு குளியல் போட்டுவிடுவேன்.

கடந்த ஆகஸ்ட் 25 அன்று தலைமையகத்தில் பிளாக் அன்ட் ஒயிட் தொலைக்காட்சி பிரிவில் பணியாற்றும் தம்பி தாஹா இல்ல திருமண நிகழ்வுக்காகச் சென்றிருந்தோம். 

அன்று காலை நெல்லை ரயில் நிலையத்தில் இறங்கியதுமே ஆற்றுக்குப் போகவேண்டும் என மாவட்ட, நகர நிர்வாகிகளிடம் கூறிவிட்டேன். அங்கே மண்டலம் ஜெய்னுலாபிதீன், கோவை செய்யது ஆகியோரும் காத்திருந்தனர்.

மேலப்பாளையத்தில் இருந்து 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரமிருக்கும். முனீர்பள்ளம் நோக்கி மாசுபடாத அந்தப் பகுதிக்குச் சென்றோம்! இதே பகுதியில் மருதநாயகம் எதிரிகளுடன் போர் செய்த வரலாற்று குறிப்பும் உள்ளது.
செடிகள், புதர்கள் அணிவகுக்க உற்சாகமாய் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணியில் இறங்கி; மூழ்கி; சோம்பல் தொலைத்து உற்சாகமானோம்.

ஏராளமானோர் நதியின் பல்வேறு கரைகளில் கூட்டம், கூட்டமாக குளித்துக் கொண்டிருந்தனர்! நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூரின் தெற்குப் பகுதிகளில்; காவிரியின் கிளை ஆறுகளில் குளிக்கும் அனுபவங்கள் எனக்கு நிறைய உண்டு! ஆனால் முற்றிலும் மாறுபட்டது தாமிரபரணி அனுபவமாகும்! இங்கு பாறைகள் அதிகம். சுழற்சியும், நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். கவனமாக குளிக்காவிடில் ஆற்றில் இழுத்துச் செல்ல நேரிடும்! 2004ல் எனக்கு அப்படி ஒரு அனுபவம் தாமிரபரணியில் நிகழ்ந்தது! நல்லவேளை தப்பித்து விட்டேன்!

அன்று நாங்கள் கவலை மறந்து குளித்தோம்! அயிரை மீன்கள் எங்களைக் கடிக்க, கடிக்க நாங்கள் துள்ளிக் குதித்தோம். அவ்வளவு குதூகலமாக இருந்தது!

ஒருபக்கம் கொக்குகள், பறவைகள் வீற்றிருந்தன. நீரோட்டம் வேகமாக இருந்தது. செடி, கொடிகள் படகுகளைப் போல மிதந்து சென்றன! அது நதிக்கு அழகு சேர்த்தது.

கிணற்றில் குளிப்பது, குளத்தில் குளிப்பது, ஏரியில் குளிப்பது போன்ற அனுபங்கள் இன்றைய தலைமுறையிடம் இல்லாமல் போய்விட்டது!

2 வாளி தண்ணீரில் அவசர அவசரமாக “கடமை’க்கு குளித்துவிட்டு, பரபரப்புகளை நோக்கி ஓடிவிடுகிறார்கள்.
இறைவன் தந்த இயற்கையின் அருட்கொடைகளை அனுபவிக்க மறுக்கிறோம்.

நாங்கள் குளித்துவிட்டு கரையேறிய போது நதிப்படுகையில் நெல்வயல்கள் பசுமையாய் சிரித்துக் கொண்டிருந்தது. வற்றாத தாமிரபரணியில் ஆண்டுதோறும் விவசாயம் நடக்கிறது! ஆனால் நன்றியுணர்வு தான் மனிதர்களுக்கு இல்லை.

இன்றும் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்கிறது. நல்லக்கண்ணு ஐயா போன்றவர்களின் போராட்டத்தால் ஓரளவு அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ‘தாமிரபரணி’ ஆறு குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நதி நாளையும் இருக்குமா? நாங்கள் அனுபவிக்கும் இந்த மகிழ்ச்சி அடுத்த 30 வருடங்களுக்குப் பிறகும் கிடைக்குமா? என மனம் ஏங்குகிறது.
ஏன்? சுற்றுச்சூழல் குறித்த அக்கறை சிறிதும் இன்றி மணல் கொள்ளை நடக்கிறது. நதியில் ஒரு பெரிய தினசரி பத்திரிக்கையின் காகித ஆலைக் கழிவுகள் கலக்கின்றன.

நெல்லை நகருக்குள் நுழையும்போது சாக்கடைப் போல் மாறுகிறது அழகான தாமிரபரணி! பூக்களையும், செடிகளையும், மூலிகைகளையும் உள்வாங்கி, மனிதர்களைத் தூய்மைப்படுத்த வந்த நதி, மனிதர்களால் அழுக்காகி; பிளாஸ்டிக் கழிவுகளை முதுகில் சுமந்தபடியே; சோகத்தோடு கடல் நோக்கி இறுதி யாத்திரை நடத்துகிறது!

எல்லா நிலைகளிலும் மனிதர்களுக்கு வாழ்வு தரும் நதியின் வாழ்வுரிமையை நாம் அழிக்கலாமா?

தோழர்களே... ஆறு, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கத் துணிவோம்! நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை எதிர்ப்போம்!

மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தால், அது தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்கும் என்ற எச்சரிக்கையை அனைவருக்கும் எடுத்துரைப்போம்!

- தமிமுன் அன்சாரி

No comments:

Post a Comment